வியாழன், 17 ஜனவரி, 2013

தேவையற்றவைகளை விட்டுவிடுவோம்

அஸ்ஸலாமு அலைக்கும்  ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹூ....

எல்லாம் வல்ல இறைவன் நாவைக்கொடுத்திருக்கான் மனிதனுக்கு...
இறைவனின் அன்பளிப்புகளில் அது மகத்தானது அது. ஒரு சிறியதொரு சதைத்துண்டுதான் என்றாலும் அதனால் விளையும் விபரீதங்கள்தான்
எத்தனை...!!!எத்தனை!!!

மனிதன் தன் நாக்கினால் நல்ல விசயங்களை பேசுவதை விட்டு விட்டு தீயவற்றையும்,தேவையற்றவைகளையும் தான் அதிகமாக பேசுகிறான்...
இதனால் அவன் மறுமையில் நஷ்டவாளியாகிவிடுகிறான் என்பதில் எள் அளவும் சந்தேகமேயில்லை.

                               

இதைப்பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்....

(நபியே!) என் அடியார்களுக்கு அவர்கள் அழகியதையே சொல்ல வேண்டும் என்று கூறுவீராக! நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் (தீயதைத் தூண்டி) விஷமஞ் செய்வான்; நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான பகைவனாக இருக்கின்றான்.
அல் குர் ஆன் -17:53.

அழகான வார்த்தைகளையே பேசுவது ஒரு முஸ்லிமின் பண்பாக இருக்க வேண்டும்...என அல்லாஹ் கூறுகிறான்.ஆனால்,நாமோ ஷைத்தானின் சூழ்ச்சியால் தேவையற்ற வார்த்தைகளை பேசி அதிகமான பாவத்தில் வீழ்ந்துவிடுகிறோம்...

அண்ணலாரின் அழகிய பொன்மொழிகளில் இன்னும் 
அதிகமான வழிகாட்டுதல்கள் உள்ளது....

“ஒரு மனிதனின் இஸ்லாம் சிறப்பானது,நிறைவானது 
என்பது அவன் தனக்கு தேவையற்றவைகளை விட்டுவிடுவதாகும்”
-திர்மிதீ-2317.

இந்த ஹதீஸின் கருத்து தேவையற்றவைகளை பேசாமல் இருப்பதும் மற்றும் வீணான செயல்களை விட்டு விலகியிருப்பதும்,ஈமான் முழுமையானது என்பதற்கு அடையாளமாகும்.

உக்பதுப்னு ஆமிர் ரலி அறிவிக்கின்றார்கள்:-
யா ரசூலில்லாஹ்! ஈடேற்றம் பெற வழி என்ன?என்று நபி ஸல் 
அவர்களிடம் கேட்டேன்,“உமது நாவைக் கட்டுபடுத்தி கொள்ளும்,
வீட்டில் தங்கியிரும்(வீணாக வெளியில் செல்ல வேண்டாம்)உமது பாவங்களை நினைத்து அழுதுகொண்டிரும்!” என்று நபி ஸல் அவர்கள் 
பதில் சொன்னார்கள்.
-திர்மிதீ-2406.

நாவைக்கட்டுப்படுத்தி வைத்தல் என்பது,அதைத்தவறாக பயன்படுத்தக்கூடாது என்பதாகும்.புறம் பேசுதல்,கோள் சொல்லுதலை 
நாம் தவிர்த்துக்கொண்டாலும் வீண் பேச்சுகள் பேசுதல்,தேவையின்றி பேசுதல்,ஒழுக்கமின்றி எல்லாவிதப்பேச்சும் பேசுதல்,வெட்கக்கேடான பேச்சுகளை பேசுதல்,சண்டை சச்சரவு செய்தல்,திட்டுதல்,மனிதனையோ மிருகத்தையோ சபித்தல்,பாட்டு மற்றும் கவிதையிலேயே எந்நேரமும் ஈடுபடுதல்,கேலி செய்தல்,சிலேடையாக பேசுதல்,காரணமின்றி பிறரை புகழ்தல்,காரணமின்றி கேள்விகள் கேட்டல்,பிறரை குத்திக்காட்டுதல்,
நக்கல்,நையாண்டி செய்தல் போன்ற விசயங்களில் பொடுபோக்காக இருந்து விடுகிறோம்.

நாம் செய்யும் இத்தகைய செயல்களை நாம் பொருட்படுத்துகிறோமோ இல்லையோ நம்முடைய நாவு தினமும் மற்ற உறுப்புகளை எச்சரிக்கிறதாம்.

“ஆதமுடைய மகன் காலை நேரத்தை அடைந்ததும் அவனது உடம்பின் எல்லா உறுப்புகளும்,நாவிடம்,“நீ எங்களுடைய காரியத்தில் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்;ஏனெனில்,எங்களுடைய காரியங்கள் உன்னுடன் தான் இணைந்துள்ளன,நீ நேராக இருந்தால் நாங்களும் நேராக இருப்போம்.நீ வளைந்து விட்டால்,நாங்களும் வளைந்துவிடுவோம்(பிறகு அதற்குரிய தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும்)என்று மிகவும் பணிவுடன் வேண்டுகின்றன”என்று நபி ஸல் அவர்கள் கூறியதாக அபூஸ்யீத் குத்ரி ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.
-திர்மிதீ-2407.

“மனிதனுடைய தவறுகளில் மிகுதமானவை அவனுடைய நாவால் ஏற்படுகின்றன்”என்று நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.
-தப்ரானீ-538

நாம் கஷ்டப்பட்டு அமல்கள் செய்ய நம்முடைய நாவு நம்முடைய நன்மைகளை வீணாக்கிவிடும் பட்சத்தில் நாம் என்ன செய்ய
வேண்டும் என அண்ணலார் கூறியுள்ளார்கள்.

“மவுனத்தை அதிகமாக கடைபிடியுங்கள்,(தேவையின்றி எதுவும் பேச வேண்டாம்)மவுனம் ஷைத்தானை விரட்டும்.தீனுடைய காரியங்களில் உமக்கு உதவியாக இருக்கும். என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

இன்னும் உபதேசியுங்கள் அல்லாஹ்வின் தூதரே! என்றார்கள்
அபூதர் ரலி அன்ஹூ.“அதிகமாக சிரிப்பதை விட்டும் தவிர்த்துக்
கொள்ளுங்கள்.ஏனெனில்,இப்பழக்கம் உள்ளத்தை மரணிக்க செய்து,
முகத்தின் ஒளியைப்போக்கிவிடுகிறது” என நபி ஸல் அவர்கள்
கூறினார்கள்.”
பைஹகீ-242.

இன்னும் மற்றுமொரு நேரத்தில்,
“மவுனமாக இருந்தவர் வெற்றிபெற்றுவிட்டார்
என அண்ணலார் கூறியுள்ளார்கள்”.
திர்மிதீ-2501

அல்லாஹ்வின் கட்டளைப்படி அழகான வார்த்தைகள் பேசுபவராகவும்,
தேவையற்ற விசயங்களை தவிர்ப்பவராகவும் இருக்க அல்லாஹ் நமக்கு உதவி செய்வானாக....

இறைவா!!! தேவையில்லாமல் பேசுவதை
விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்....
பிறரை குறை சொல்வதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

2 கருத்துகள்: