வியாழன், 17 ஜனவரி, 2013

தேவையற்றவைகளை விட்டுவிடுவோம்

அஸ்ஸலாமு அலைக்கும்  ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹூ....

எல்லாம் வல்ல இறைவன் நாவைக்கொடுத்திருக்கான் மனிதனுக்கு...
இறைவனின் அன்பளிப்புகளில் அது மகத்தானது அது. ஒரு சிறியதொரு சதைத்துண்டுதான் என்றாலும் அதனால் விளையும் விபரீதங்கள்தான்
எத்தனை...!!!எத்தனை!!!

மனிதன் தன் நாக்கினால் நல்ல விசயங்களை பேசுவதை விட்டு விட்டு தீயவற்றையும்,தேவையற்றவைகளையும் தான் அதிகமாக பேசுகிறான்...
இதனால் அவன் மறுமையில் நஷ்டவாளியாகிவிடுகிறான் என்பதில் எள் அளவும் சந்தேகமேயில்லை.

                               

இதைப்பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்....

(நபியே!) என் அடியார்களுக்கு அவர்கள் அழகியதையே சொல்ல வேண்டும் என்று கூறுவீராக! நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் (தீயதைத் தூண்டி) விஷமஞ் செய்வான்; நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான பகைவனாக இருக்கின்றான்.
அல் குர் ஆன் -17:53.

அழகான வார்த்தைகளையே பேசுவது ஒரு முஸ்லிமின் பண்பாக இருக்க வேண்டும்...என அல்லாஹ் கூறுகிறான்.ஆனால்,நாமோ ஷைத்தானின் சூழ்ச்சியால் தேவையற்ற வார்த்தைகளை பேசி அதிகமான பாவத்தில் வீழ்ந்துவிடுகிறோம்...

அண்ணலாரின் அழகிய பொன்மொழிகளில் இன்னும் 
அதிகமான வழிகாட்டுதல்கள் உள்ளது....

“ஒரு மனிதனின் இஸ்லாம் சிறப்பானது,நிறைவானது 
என்பது அவன் தனக்கு தேவையற்றவைகளை விட்டுவிடுவதாகும்”
-திர்மிதீ-2317.

இந்த ஹதீஸின் கருத்து தேவையற்றவைகளை பேசாமல் இருப்பதும் மற்றும் வீணான செயல்களை விட்டு விலகியிருப்பதும்,ஈமான் முழுமையானது என்பதற்கு அடையாளமாகும்.

உக்பதுப்னு ஆமிர் ரலி அறிவிக்கின்றார்கள்:-
யா ரசூலில்லாஹ்! ஈடேற்றம் பெற வழி என்ன?என்று நபி ஸல் 
அவர்களிடம் கேட்டேன்,“உமது நாவைக் கட்டுபடுத்தி கொள்ளும்,
வீட்டில் தங்கியிரும்(வீணாக வெளியில் செல்ல வேண்டாம்)உமது பாவங்களை நினைத்து அழுதுகொண்டிரும்!” என்று நபி ஸல் அவர்கள் 
பதில் சொன்னார்கள்.
-திர்மிதீ-2406.

நாவைக்கட்டுப்படுத்தி வைத்தல் என்பது,அதைத்தவறாக பயன்படுத்தக்கூடாது என்பதாகும்.புறம் பேசுதல்,கோள் சொல்லுதலை 
நாம் தவிர்த்துக்கொண்டாலும் வீண் பேச்சுகள் பேசுதல்,தேவையின்றி பேசுதல்,ஒழுக்கமின்றி எல்லாவிதப்பேச்சும் பேசுதல்,வெட்கக்கேடான பேச்சுகளை பேசுதல்,சண்டை சச்சரவு செய்தல்,திட்டுதல்,மனிதனையோ மிருகத்தையோ சபித்தல்,பாட்டு மற்றும் கவிதையிலேயே எந்நேரமும் ஈடுபடுதல்,கேலி செய்தல்,சிலேடையாக பேசுதல்,காரணமின்றி பிறரை புகழ்தல்,காரணமின்றி கேள்விகள் கேட்டல்,பிறரை குத்திக்காட்டுதல்,
நக்கல்,நையாண்டி செய்தல் போன்ற விசயங்களில் பொடுபோக்காக இருந்து விடுகிறோம்.

நாம் செய்யும் இத்தகைய செயல்களை நாம் பொருட்படுத்துகிறோமோ இல்லையோ நம்முடைய நாவு தினமும் மற்ற உறுப்புகளை எச்சரிக்கிறதாம்.

“ஆதமுடைய மகன் காலை நேரத்தை அடைந்ததும் அவனது உடம்பின் எல்லா உறுப்புகளும்,நாவிடம்,“நீ எங்களுடைய காரியத்தில் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்;ஏனெனில்,எங்களுடைய காரியங்கள் உன்னுடன் தான் இணைந்துள்ளன,நீ நேராக இருந்தால் நாங்களும் நேராக இருப்போம்.நீ வளைந்து விட்டால்,நாங்களும் வளைந்துவிடுவோம்(பிறகு அதற்குரிய தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும்)என்று மிகவும் பணிவுடன் வேண்டுகின்றன”என்று நபி ஸல் அவர்கள் கூறியதாக அபூஸ்யீத் குத்ரி ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.
-திர்மிதீ-2407.

“மனிதனுடைய தவறுகளில் மிகுதமானவை அவனுடைய நாவால் ஏற்படுகின்றன்”என்று நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.
-தப்ரானீ-538

நாம் கஷ்டப்பட்டு அமல்கள் செய்ய நம்முடைய நாவு நம்முடைய நன்மைகளை வீணாக்கிவிடும் பட்சத்தில் நாம் என்ன செய்ய
வேண்டும் என அண்ணலார் கூறியுள்ளார்கள்.

“மவுனத்தை அதிகமாக கடைபிடியுங்கள்,(தேவையின்றி எதுவும் பேச வேண்டாம்)மவுனம் ஷைத்தானை விரட்டும்.தீனுடைய காரியங்களில் உமக்கு உதவியாக இருக்கும். என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

இன்னும் உபதேசியுங்கள் அல்லாஹ்வின் தூதரே! என்றார்கள்
அபூதர் ரலி அன்ஹூ.“அதிகமாக சிரிப்பதை விட்டும் தவிர்த்துக்
கொள்ளுங்கள்.ஏனெனில்,இப்பழக்கம் உள்ளத்தை மரணிக்க செய்து,
முகத்தின் ஒளியைப்போக்கிவிடுகிறது” என நபி ஸல் அவர்கள்
கூறினார்கள்.”
பைஹகீ-242.

இன்னும் மற்றுமொரு நேரத்தில்,
“மவுனமாக இருந்தவர் வெற்றிபெற்றுவிட்டார்
என அண்ணலார் கூறியுள்ளார்கள்”.
திர்மிதீ-2501

அல்லாஹ்வின் கட்டளைப்படி அழகான வார்த்தைகள் பேசுபவராகவும்,
தேவையற்ற விசயங்களை தவிர்ப்பவராகவும் இருக்க அல்லாஹ் நமக்கு உதவி செய்வானாக....

இறைவா!!! தேவையில்லாமல் பேசுவதை
விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்....
பிறரை குறை சொல்வதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

புதன், 16 ஜனவரி, 2013

சுபுஹானல்லாஹ்

அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ....

இவ்வுலகில் மனிதனால் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும்
தீர்வுஅல்லாஹ்வின் வேதத்திலும்,அண்ணலாரின் பொன்மொழிகளிலும் கண்டிப்பாக இருக்கும்.

அவனுடைய படைப்பின் ரகசியங்களில் அவனுடைய வல்லமையையும்,
மனிதனுக்கு அல்லாஹ் கொடுத்த அருளையும்  சிந்திக்கும்போது......
சுபுஹானல்லாஹ்.............. வேறு வார்த்தைகள் இல்லை.....



                             
இக்காலத்தில் வாழ்க்கையை இயந்திரங்களோடு கழிக்கும்  சூழல் 
உலக மக்கள் தொகையில் பெரும்பாலானோருக்கு உள்ளது...
அதனால்,மிகப்பெரும் பயனடைந்தாலும் அதனால் ஏற்படும் 
பக்கவிளைவுகள் அதிகமாகவே உள்ளது....

செல்போன்,லேப்டாப்,செல்போன் டவர் இன்னும் எலக்ட்ரானிக் பொருள்களில் இருந்து வரும் கதிர்வீச்சுகளின் தீமைகளைப்பற்றி
பயமுறுத்தும் செய்திகள் தொடர்ந்து வந்தாலும் வேறு வழியில்லை
என்ற காரணத்தால் பயன்படுத்தத்தான் செய்கிறோம்.....

கண்டிப்பாக இதற்கு மாற்று வழி ஒன்று இருக்கத்தான் செய்யும் என
நான் யோசித்துக்கொண்டிருக்கும் வேளையில்தான் பசுமை விகடனில் 
அந்த ஆச்சரியம் தரும் செய்தியை படிக்க நேர்ந்தது.....

வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு விழுப்புரம் வன விரிவாக்க
அலுவலர்கே.ஏழுமலை சொன்ன பதில் தான் அது....

“செம்மரம் என்பதும் செஞ்சந்தனம் என்பதும் ஒன்றுதான்....இம்மரங்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் நிறைய உள்ளன.
குறிப்பாக.......தமிழ்நாடு,ஆந்திர மாநில எல்லையில் அதிக அளவில் காணப்படுகின்றன.

சந்தன மரத்துக்கு அடுத்தபடியாக அதிகவிலைக்கு விற்கப்படும் மரம் இதுதான்.இசைக்கருவிகள் செய்ய இம்மரம் பயன்படுகிறது.இம்மரம் அணுக்கதி வீச்சை தடுக்கும் ஆற்றல் கொண்டிருப்பதால்,ஜப்பான் நாட்டில்
இதைக்கடவுளுக்கு இணையாக போற்றுகின்றனர்.

அந்த நாட்டில் திருமண சீர் வரிசையாக செஞ்சந்தன மரத்தில் செய்த கட்டில்,மேசை,பொம்மைகள் போன்ற பொருட்களைத்தான் கொடுக்கிறார்கள்.
வீடு முழுக்க இம்மரப்பொருட்கள் இருந்தால்.......  கதிர்வீச்சால் பாதிப்பு உண்டாகாது.அதனால் பல நாடுகளில் அணு உலைகளைச் சுற்றி இம்மரங்களை அதிகமாக வளர்த்து வருகிறார்கள்....
திருவள்ளூர் மாவட்ட வன விரிவாக்க மையத்தில் இக்கன்றுகள் கிடைக்கின்றன”................

சுபுஹானல்லாஹ்...இதுதான் அந்த செய்தி....

“எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் 
நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; 
அல்குர் ஆன்3:190,191
என்ற வசனம் தான் எனக்கு அப்போது நினைவுக்கு வந்தது.....

மனிதனின் கண்டுபிடிப்புகளால் ஏற்படும் நோய்களுக்கு இறைவனின் படைப்புகளில் ஒன்றான மரத்தை அல்லாஹ் எப்படியெல்லாம்
நோய் தீர்க்கும் மருந்தாக ஆக்கியுள்ளான் 

அல்லாஹ்வின் ஒவ்வொரு படைப்பிற்கும் நாம் தனித்தனியாக 
நன்றி செலுத்தினாலும் நம் வாழ்நாளே பற்றாக்குறையாக தான் இருக்கும் என்பதே மிக உண்மை.....

“என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!”. அல்குர் ஆன் -27:19

திங்கள், 31 டிசம்பர், 2012

மன மாற்றத்தை ஏற்படுத்திய இளைஞன்

நபி ஸல் அவர்களின் காலத்தில்,அவர்களது நல்ல செயல்களையும்,
அன்னாரின் தோழர்களின் செயல்களையும் பார்த்து பலர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.அதே போல்,இப்போது சிறந்த முஸ்லிம்களின் நல்ல செயல்களைப்பார்த்து பலர் இஸ்லாத்தில்நுழைகின்றனர்.இதற்கு ஆதாரமாக அரபி மொழியில் இருந்து அல்குர் ஆனை ஆங்கில  மொழிக்கு மொழிபெயர்த்த முஹம்மது மெர்மதூக் பிக்தால் என்பவரின் சம்பவம் அமைந்துள்ளது.



ஒரு முறை மாலை நேரத்தில்,பிக்தால் அவர்கள் லெபனானின் தலைநகரில்,
உயர்ந்த மாடிக்கட்டடமொன்றில் நின்றவாறு,பிரதானவீதியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.முஸ்லிம்கள் அதிகமாக வாழுகின்ற லெபனானின் பிரதான வீதியில்,ஒரு யூதக்கிழவன்,ஒரு முஸ்லிம் இளைஞனை தனது கைத்தடியால் கடுமையாக அடிக்கின்ற காட்சி இவர் மனதை நெகிழ வைத்தது.

உடனே,மாடியிலிருந்து மிக வேகமாக இறங்கி வந்து,
அந்த இளைஞனிடம்,“ஏன் ஒரு யூதக்கிழவனிடம் இவ்வாறு அடி வாங்குகின்றாய்??இந்தப்பகுதியில் முஸ்லிம்கள் தானே அதிகமாக வாழ்கின்றனர்,நீயும் வலிமையான இளைஞனாக இருக்கின்றாய்?”என்று ஆச்சரியத்துடன் விசாரித்தார்.

அதற்கு அந்த இளைஞன்,“நான் இந்த யூதக்கிழவனிடம் சில நாட்களுக்கு முன்னர் கடன் வாங்கினேன்.இப்போது என்னால் அதைக்கொடுக்க முடியவில்லை.அதனால் ,அவர் என்னை தண்டிக்கின்றார்.எனது உயிரினும் மேலான,மரியாதைக்குரிய இறைத்தூதர் முஹம்மது நபி ஸல் அவர்கள் கடனை உரிய முறையில் திருப்பி கொடுக்குமாறு  கட்டளையிட்டுள்ளார்கள்.

எனவே அந்த யூதருக்கு என்னிடம் கடினமாக நடந்து கொள்ள உரிமையுள்ளது.முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கிறோம் என்பதற்காக மற்ற மதத்தவர்களின் உரிமைகளை நாங்கள் பறிக்க மாட்டோம்.முஸ்லிம்கள் அநீதிக்கு உதவி செய்யக்கூடாது
என்று நபியவர்கள் போதனை செய்துள்ளார்கள்”என அந்த இளைஞன் பிக்தாலுக்கு மிக அழகாக உபதேசம் செய்தார்.

இந்த உபதேசம் அவரின் மனதில் நபியவர்களைப்பற்றியும் இஸ்லாத்தைப்பற்றியும் நன்மதிப்பை ஏற்படுத்தியது.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த முஹம்மது நபி ஸல் அவர்களின் போதனைகளை,இந்த இளைஞன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துப்பின்பற்றுகிறானே!!!
என அவரின் மனதில் ஆச்சர்யம் ஏற்பட்டது.

அந்த மாமனிதரின் வார்த்தைகளுக்கு இவ்வளவு வலிமையா???இத்தனை மகத்துவமா???என ஆயிரமாயிரம் கேள்விகள் அவர் மனதில் எழுந்தன.

மறுகணமே,நூலகங்களில் நபி ஸல் அவர்களைப் பற்றிய நூல்களைப் படிக்க ஆரம்பித்தார்.முஹம்மது நபி ஸல் அவர்களின் தூய்மையான வாழ்க்கை வரலாறு,அவரது மனதை நெகிழ வைத்தது.இருள் அகன்றது.வாழ்வில் புதுத்தெம்பு ஏற்பட்டது.

1914ஆம் ஆண்டு புனித இஸ்லாத்தை ஏற்றார்.
இஸ்லாத்தில் பற்றுள்ள ஓர் இளைஞனின் செயல்,ஒரு கிறிஸ்தவரைஇஸ்லாத்தில் இணைத்துவிட்டது.
இவ்வாறு நாமும் மற்றவர்களை,நற்பண்புகள் மூலம்
இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்க வேண்டும்...